பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி: விமர்சித்த பிரியங்க் கார்கே- பாஜக அளித்த பதில்..!

அரசுக்கு இக்கட்டான கேள்விகள் எழும்போது, ​​அவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தருணங்களில் பிரதமர் வெளிப்படையாகவே தலைமறைவாகிவிடுகிறார்.
பிரதமர் மோடி- பிரியங்க் கார்கே
பிரதமர் மோடி- பிரியங்க் கார்கே
Published on: 
Summary

பஜனை மற்றும் பக்தி எனும் இந்தியாவின் சிறப்பான கலாசார பாரம்பரியத்தை காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை கேலி செய்து அவமதித்துள்ளது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

சங் பரிவாரின் கொள்கை வழிகாட்டியான தீன்தயாள் உபாத்யாயாவின் 110-வது பிறந்தநாள் விழாவையொட்டி டெல்லி பாஜக தலைமையகத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் நேற்று பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

SIR விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்காமல், பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று பிரியங் கார்கே கிண்டல் செய்யும் வகையில் கூறியிருந்தார்.

பிரியங்க் கார்கே

இது தொடர்பாக பிரியங்க் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் "பிரதமர் மோடிக்கு பஜனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் மூலம் ஜனநாயகம் நசுக்கப்படுவது குறித்த தீவிரமான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவருக்கு நேரமில்லை.

கடந்த 13 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பாணி தொடர்ந்து வருகிறது. அரசுக்கு இக்கட்டான கேள்விகள் எழும்போது, ​​அவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தருணங்களில் பிரதமர் வெளிப்படையாகவே தலைமறைவாகிவிடுகிறார். கொண்டாட்டங்களுக்கு அவர் முன்னிலை வகிக்கிறார். ஆனால் பொறுப்புக்கூறல் என்று வரும்போது மௌனம் காக்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பஜனை மற்றும் பக்தி எனும் இந்தியாவின் சிறப்பான கலாசார பாரம்பரியத்தை காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை கேலி செய்து அவமதித்துள்ளது. சுயநலம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தைப் புகழ்ந்து பாடுவதில் மட்டுமே வல்லவரான ஜூனியர் கார்கேவிடம் இருந்து இதைவிடச் சிறந்ததை என்ன எதிர்பார்க்க முடியும்?

ராகுல் காந்தியை பற்றி பேச துணிச்சல் இருக்கிறதா?

ராகுல் காந்தியின் மோசமான தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3 மக்களவை தேர்தல்களில் தோல்வியடைந்தும், ஏறக்குறைய 100 சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்திருந்தும், அந்தத் தோல்விகளுக்கும் ராகுல் காந்தியின் பொறுப்புக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசும் துணிச்சல் ஜூனியர் கார்கேவுக்குச் சிறிதளவாவது இருக்கிறதா?

இவ்வாறு சி.ஆர். கேசவன் பதில் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் விவகாரம்

SIR பணியில் படிவம் 6-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தவிர்த்து மற்ற இரண்டு ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனால் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், நாடாளுமன்றத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com