இத்தாலிய கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்கள்: மோடி அரசு மீதான விமர்சனத்திற்கு சோனியா காந்திக்கு பாஜக பதிலடி

காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த சம்பவங்கள் குறித்தும் தனது புத்தகத்தில் சோனியா காந்தி எழுத வேண்டும்.
Sonia Gandhi
Published on: 
Summary

கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காண சோனியா காந்தி தனது 'இத்தாலிய கண்ணாடியை' கழட்டிவிட்டுப் பார்க்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட விமர்சனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காண சோனியா காந்தி தனது 'இத்தாலிய கண்ணாடியை' கழட்டிவிட்டுப் பார்க்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

சுயசரிதை

தனது புதிய சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' வெளியீட்டை முன்னிட்டு ஆங்கில நாளிதழுக்கு சோனியா காந்தி பேட்டியளித்திருந்தார். அதில், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் நாட்டின் மீதான சமூகக் கட்டமைப்புக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

மோடி அரசு பதவி விலகினாலும் கூட, நாட்டின் அமைப்புகளை பழைய நிலைக்கு கொண்டுவர நீண்ட காலம் ஆகும் என்றும், பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிருப்தியும் அமைதியின்மையும் அதிகரித்து வருவதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் அந்தப் பேட்டியில் நியாயப்படுத்தியிருந்தார்.

பாஜக பதிலடி

சோனியா காந்தியின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளித்துள்ள பாஜக ராஜ்யசபா எம்.பி. தருண் சுக், "நீங்கள் உங்கள் இத்தாலிய கண்ணாடியைக் கழட்டிவிட்டுப் பார்த்தால் மட்டுமே சப் கா சாத், சப் கா விகாஸ் மற்றும் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன் உலகளாவிய சக்தியாக உயர்ந்துவரும் இந்தியாவைத் தெளிவாகப் பார்க்க முடியும்" என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்பது சாதி, மதம் மற்றும் ஓட்டு வங்கி அரசியலால் நாட்டைப் பிரிப்பதாகவே இருந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், அவசர நிலை பிரகடனம், போஃபர்ஸ் ஊழல், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் போபால் விஷவாயு கசிவு துயரம் போன்ற காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த சம்பவங்கள் குறித்தும் தனது புத்தகத்தில் சோனியா காந்தி எழுத வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேபோல், அவசர நிலை பிரகடனத்தை சோனியா காந்தி நியாயப்படுத்துவதை வன்மையாகக் கண்டித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, இந்திரா காந்தியை ஒரு பலியாடாக சித்திரிக்க சோனியா காந்தி முயல்வதாகவும், அவர்களின் இத்தகைய மக்கள் தொடர்பு தந்திரங்களால் வரலாற்றின் உண்மையை மறைக்க முடியாது என்றும் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்துக்களையும் நாட்டின் கலாச்சாரத்தையும் எதிர்க்கிறது என்றும் பாஜக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

X