பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட அதிமுக அரசுக்கு தகுதி இல்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட அதிமுக அரசுக்கு தகுதி இல்லை என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
முக ஸ்டாலின் பேசிய காட்சி.
முக ஸ்டாலின் பேசிய காட்சி.
Published on

மதுரை:

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தின் நிதி நிலைமை கோமா நிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன், கடந்த 3 ஆண்டில் அதிமுக ஆட்சியில் ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சியை விட முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சியில் தான் கடன் தொகை அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை கவலை தருவதாக உள்ளது.

ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் விழுந்து சென்னையில் சுபஸ்ரீ இறந்தார். கோவையில் அனுராதா காயமடைந்தார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது?  

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட அதிமுக அரசுக்கு தகுதி இல்லை.

தமிழகத்தில் முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட தயாரா? தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 7.27 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சரின் விரல் நகத்தில் மண் இல்லை, ஊழல் கறைதான் உள்ளது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான்.  திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாட்சி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com