2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ஆ.ராசா சென்னை வருகை: தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து சென்னை வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ஆ.ராசா சென்னை வருகை: தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
Published on

2ஜி வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோரை விடுதலை செய்து சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

இது தி.மு.க.வினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு பின் கனிமொழி, ராசா ஆகியோர் இன்று சென்னை திரும்பினார்கள்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து குவிந்து இருந்தனர். ஆட்டம்-பாடலுடன் மேள தாளம் முழங்க வரவேற்க காத்திருந்தனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரை முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

12.10 மணிக்கு கனிமொழி, ராசா வந்த விமானம் தரை இறங்கியது. அவர்களை மு.க.ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்தும் கட்டித்தழுவியும் வரவேற்றார்.


உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதி கார் பார்க்கிங் அருகே வரவேற்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடைக்கு கனிமொழியும், ராசாவும் தாரை தப்பட்டை முழங்க தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

வழிநெடுக இருவர் மீதும் பூக்களை தூவியவாறு வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இருவரும் மேடையில் ஏறி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

கட்சி நிர்வாகிகள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பூங்கொத்து, மாலைகள், பொன்னாடைகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டர்கள் கைகளில் தி.மு.க. கொடியையும், அநீதி வீழும் அறம் வெல்லும் என்ற கருணாநிதியின் வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ராசாவின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விமான நிலையம் வந்து இருந்தனர். அவர்கள் இதய வடிவலான பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். அதில் கருணாநிதியின் காலில் விழுந்து ராசா வணங்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது.


விமான நிலையத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமாக திரண்டு இருந்தனர். இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.

வரவேற்பு முடிந்ததும் கனிமொழி, ராசா இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அங்கு வந்திருந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனையும் இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக வீட்டு வாசல் முன்பு தொண்டர்கள் மேள-தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com