

திருவேற்காடு வேலப்பன்சாவடியில் மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் காரம்பாக்கம் கணபதி மகள் லாவண்யா-மதன் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகுதான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.
ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டி வைக்கப்பட்டு உள்ளது. அது மூடப்பட்டு விட்டதா? அதை மூடிய பிறகுதான், எந்த அனுமதியும் இனி கிடையாது என்ற உத்தரவுக்கு பின்னரே முதல்-அமைச்சர் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற முடியும்.
இதனை மத்திய அரசுதான் நிறைவேற்ற முடியும். இதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டதா? அதை ஏன் முதல்-அமைச்சரால் இதுவரை வெளியில் சொல்ல முடியவில்லை. விவசாயிகளை ஏமாற்றும் விதமாக நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பான அரசாணை வெளியிடுவது எப்போது? கூறியபடி கொண்டு வந்தால் அதை வரவேற்க காத்திருக்கிறோம்.
இதே போலதான் நீட் வராது என்றார்கள். சட்டசபையிலும் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அறிக்கையிலும் கூறினார்கள். ஆனால் நீட் தேர்வு உள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் டெல்லிக்கு சென்று ரகசிய கடிதம் கொடுத்துள்ளார். அது என்ன கடிதம்? இது சம்பந்தமான கடிதமா அல்லது நீங்கள் ஏற்கனவே வழக்கில் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறீர்களே அது சம்பந்தமானதா? அதை வெளியிட வேண்டும்.
நாளை மறுநாள் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து கேள்வி எழுப்ப போகிறோம்.
உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல் தோல்விகளால் இதுபோன்ற அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார். விரைவில் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழ்நிலை வரும்.