‘நீட்’ தேர்வு மசோதா: ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

‘நீட்’ தேர்வு தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாக்களை மத்திய அரசு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
‘நீட்’ தேர்வு மசோதா: ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
Published on

சட்டசபையில் இன்று தங்கம் தென்னரசு (தி.மு.க.) ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நீட் நுழைவுத்தேர்வு குறித்து விரிவாக பேசினார்.

நீட் நுழைவுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா? இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டதே? அதன் நிலைமை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், ‘‘நீட் நுழைவுத் தேர்வில் இருந்து மாநில அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அம்மாவின் கொள்கையில் தெளிவாக உள்ளோம். இதற்காக 2 மசோதா நிறைவேற்றினோம். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை மத்திய அரசு மசோதாக்களை ஜனாதிபதியிடம் அனுப்பவில்லை.

தற்போது மசோதாக்கள் தொடர்பாக மத்திய உள்துறை சட்டப் பிரிவில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 முறை பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். 26-ந்தேதி நீட் தேர்வு முடிவு வர உள்ளது.

எனவே கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக விகிதாச்சார உள் ஒதுக்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது’’ என்றார்.

உடனே துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து, ‘‘ஆபரே‌ஷன் சக்சஸ். பே‌ஷண்ட் டெத்’’ என்று சொல்வது போல் உங்கள் கருத்து உள்ளது. இன்னும் ஏன் கால தாமதம் செய்கிறீர்கள். அங்கே போய் உட்கார்ந்து கேட்க வேண்டாமா’’ என்று ஆவேசமாக பேசினார்.

இதற்கு அமைச்சர் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கூறுகையில், ‘‘தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்த போது என்ன செய்தீர்கள். காவிரி ஆணையம் அமைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீட் பிரச்சினைக்கு காரணமே காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசு தான்’’ என்றனர்.

உடனே துரைமுருகன் எழுந்து, ‘‘நாங்கள் செய்யவில்லை என்பதற்காகத்தான் உங்களை உட்கார வைத்தார்கள். நீங்களும் செய்யாவிட்டால் எப்படி? என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com