வரும் காலங்களில் பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிருங்கள்: மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை

குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மன்மோகன் சிங், வரும் காலங்களில் பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறினார்.
Published on

ராஜ்கோட் :

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை  வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமரும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையால், நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் சிறப்பானதாக இல்லை. பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது.

இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. ஆனால், நாங்கள் எடுத்த எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. எனவே வரும் காலங்களில் பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய நடவடிக்கைகளை தவிருங்கள்.

காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வால் அப்படி நடக்க முடியாது.

அவர்களது ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com