தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு குறையும்- சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விடும் என்று சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன்
டாக்டர் ராதாகிருஷ்ணன்
Published on

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணனை கடந்த வாரம் தமிழக அரசு நியமித்து இருந்தது. இவர் சுகாதாரத்துறையின் முன்னாள் முதன்மை செயலாளராக பணியாற்றியவர்.

இவருக்கு சுகாதாரத்துறையில் நல்ல அனுபவம் உள்ளதால் அதிகாரிகளை அழைத்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

கொரோனாவால் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் தற்போது அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். கொரோனா வைரஸ் பரவும் பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களை எல்லாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகிறோம்.

அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் தேவையான தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது கொரோனா தொற்றை பரவாமல் செய்யும். அதுமட்டுமல்ல கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தில் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து சிறிது விலகி இருந்தாலே குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும்.

இதை வலியுறுத்துவதற்காகவும் நோய் பரவாமல் தடுப்பதற்காகவும் களப்பணியாளர்கள் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் இதில் கடமை உள்ளது. தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிவது, கைகளை நன்றாக சுத்தம் செய்வது, போதிய இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா தொற்றை தடுத்து விட முடியும்.

வெளியில் செல்லும்போது குடை பிடித்து சென்றால் ஒருவரிடம் மற்றொருக்கு இடைவெளி அதிகரிக்கும். இதனால் கொரோனா தொற்று பரவுவது தடுக்கப்படும். தற்போது வெயில் காலம் என்பதால் குடை பிடித்து சென்றால் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

மூச்சு திணறல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், முதியோர், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் நோய் அறிகுறி தென்பட்டால் உடனே அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும். அவர்களை நோயில் இருந்து பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com