உள்ளாட்சி தேர்தல் பிரச்சினையில் அவதூறு: தமிழக அரசு- தேர்தல் ஆணையம் மீது தி.மு.க. வழக்கு தொடர முடிவு

உள்ளாட்சி தேர்தல் பிரச்சினையில் தி.மு.க மீது அவதூறு பரப்பி வரும் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சினையில் அவதூறு: தமிழக அரசு- தேர்தல் ஆணையம் மீது தி.மு.க. வழக்கு தொடர முடிவு
Published on

கவுண்டம் பாளையத்தில் தி.மு.க.வின் கோவை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட வக்கீல் அணி நடத்தும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பயிற்சிப் பட்டறைத் தொடக்க விழா நடைபெற்றது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவருக்கு பெரியாருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் கொள்கை பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் வரும். தேர்தல்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை கண்டறிந்து உயர் அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காணவே இதுபோல் பூத் ஏஜெண்டுகள், வட்ட செயலாளர்கள், இளம் வக்கீல்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. கோவையில் இன்று தொடங்கும் இந்த பயிற்சி பட்டறை தமிழகம் முழுவதும் 10 வாரங்களுக்கு நடைபெறும்.

கடந்த சட்டசபை தேர்தலில் 20 முதல் 30 தொகுதிகளில் தி.மு.க. மிக மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது. குறிப்பாக ராதாபுரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் தி.மு.க. தோற்றது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு தி.மு.க. தொடர்ந்த வழக்கு தான் என தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.

தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் வரன்முறைப்படி நடப்பதற்குத் தான் வழக்கு போட்டது. இதில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தி.மு.க. தான் காரணம் என்று பொய்யான தகவல்களை பரப்பி வரும் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

தமிழக டி.ஜி.பி.க்கு 2 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு காரணம், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை- கொள்ளையை மறைக்கத் தான் என சந்தேகம் உள்ளது. டி.ஜி.பி. பதவி நீட்டிப்பு குறித்தும் வழக்கு தொடரப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com