தாஜ்மகால்
தாஜ்மகால்

வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருவதால் கொரோனோ பரவாமல் தடுக்க தாஜ்மகாலை மூடவேண்டும்

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து பார்வையிடும் தாஜ்மகாலை தற்காலிகமாக மூட வேண்டும் என ஆக்ரா மேயர் நவீன் ஜெயின், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Published on

லக்னோ:

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து பார்வையிடும் தாஜ்மகாலை தற்காலிகமாக மூட வேண்டும் என ஆக்ரா மேயர் நவீன் ஜெயின், மத்திய சுற்றுலாத்துறை அமைச்ச கத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தாஜ்மகால் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கியமான தொல்பொருள் மற்றும் கலாச்சார தலங்களை தற்காலிகமாக மூட வேண்டும்.

தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த இடங்களை பார்வையிடுகின்றனர். சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

நம் நாட்டில் நிலவரம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்றாலும் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 2915 பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதில் 713 பேரின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், 702 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர்களை ஆஸ்பத்திரிகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com