மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை- கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் வினய்
கலெக்டர் வினய்
Published on

மதுரை:

ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 29-ந் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 46 ஆயிரத்து 627 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் நிவாரணமாக வழங்க ரூ.4 கோடியே 66 லட்சத்து 27 ஆயிரம் ஒதுக்கீடாக பெறப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைத்து அசல் தேசிய அடையாள அட்டையுடன் தங்களது குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்து நிவாரணத் தொகையை பெறலாம்.

இந்த நிவாரணத்தொகை 29-ந் தேதி முதல் வீட்டிற்கு சென்று வழங்கப்படும். நிவாரணத் தொகை பெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண்: 04522529695 மற்றும் மாநில மைய எண் 18004250111-ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் கேட்கும் திறனற்ற வாய்பேச இயலாதவர்கள் 9700799993 என்ற எண்ணில் வாட்ஸ்-அப்பில் தகவல் பெற்று பயனடையலாம்.

மேலும் மதுரையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தப்படி உள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒரே இடத்தில் குவிய வேண்டாம். மேலும் தங்கள் இருப்பிடம் அருகில் உள்ள கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் தங்கள் பகுதியில் இயங்கும் முகாம்களை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com