ஆன்மிகம்

பார்க்க முக்தி தரும் பிரபஞ்ச ரகசியநாதர்- தில்லை நடராஜர் திருத்தலம்!

சிதம்பரம் போவோர்க்கு வாழ்வின் சிக்கல்கள் நீங்கி மனநிம்மதி கிடைக்கும்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!

                                           - திருநாவுக்கரசு சுவாமிகள்.

பஞ்சபூத தலம் :

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவில் ஆகாயத்தலமாக போற்றப்படுகிறது. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தலமாக கருதப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

'கோவில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். ஊர்ப்பெயர் இன்று வழக்கில் மறைந்து, கோவிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.

இறைவர் திருப்பெயர்: ஆனந்த நடராஜர், அம்பலகூத்தர், திருமூலட்டானேசுவரர், கூத்தபிரான், கனகசபாபதி.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமி, சிவகாமசுந்தரி.

தல விருட்சம்: ஆல மரம் , தில்லை மரம்.

தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்), பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலிய பத்துத் தீர்த்தங்கள் மொத்தம் உள்ளன.

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய பல நாயன்மார்களும் முனிவர்களும் பாடல்கள் பாடி வழிபட்டுள்ளனர். பதஞ்சலி முனிவர், புலிப்பாணி சித்தர் போன்றோருக்கு நடனக் காட்சி கொடுத்த தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.

முனிவர் உருவாக்கிய கோவில்:

சிதம்பரம் கோவிலின் ஒரு சிறப்பம்சமாக நடராஜர் இருந்தாலும், ஆகாய தத்துவத்தின் அடையாளமாக வெற்றிடமே மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்து மூலவர் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இங்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதஞ்சலி முனிவரால் இக்கோவில் உருவாக்கப்பட்டது. பதஞ்சலி முனிவர் வகுத்துதந்தபடியே பொதுவான நடைமுறைகளும், சடங்குகளும் தீட்சிதர்களால் இன்றும் கோவில் வளக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை.

மகா அபிஷேகம்:

சிதம்பரத்தின் தனிச்சிறப்பில் மார்கழி மாதத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும் ஒன்று. சிவபெருமானின் வடிவங்களில் ஒருவரான நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும்.

ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தி, புரட் டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்களை 'மகா அபிஷேகம்' என்று அழைப்பர்.

இம்மாதத்தில் இறைவன் நடராஜரும் அம்பாள் சிவகாமிதேவியும் விழாக்கோலம் பூண்டு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ஆனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு 'ஆனி உத்திர திருமஞ்சனம்' என்று பெயர். அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. இருப்பினும், சிதம்பரத்தில் 10 நாள் உற்சவமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனத்தை காண, முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் கோவில்களில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

சிவபெருமான், மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் காட்சி அளித்தது ஆனி உத்திர நட்சத்திரத்தில் தான். மேலும், மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே கைப்பட எழுதியதுதான் திருவாசகம் என்கிறார்கள். பின்னர் மாணிக்கவாசகரும் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானதாக கூறப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாகவே ஆனி உத்திர நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

சிதம்பர ரகசியம்:

இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும்கொண்டுள்ளனர். இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது.

  1. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

  2. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது.

  3. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நரம்புகளை குறிக்கின்றது.

  4. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது. இது 64கலைகளை குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

  5. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் 'ஆனந்த தாண்டம்' என்ற கோலம் “காஸ்மிக் டான்ஸ்” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

  6. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்த புலத்தின் மைய மையத்தில், பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதியில் என்று கூறப்படுகின்றது.

  7. இக்கோவிலில் கனக சபை தாங்க

    4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது.

இவையே சிதம்பர ரகசியம் என்று போற்றப்படுகின்றன. சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்த தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் உணர்த்துகிறது.

சிதம்பரம் போவோர்க்கு வாழ்வின் சிக்கல்கள்நீங்கி மன நிம்மதி பெறுவார் என்பது ஐதீகம்.

நடைதிறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்!!