அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றுகை திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டதை போல் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகையையும் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின்படி ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்தின் மீதான முற்றுகையை அமெரிக்கப் படைகள் நீக்கி உள்ளன.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள ஈரானின் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்வதையோ அல்லது அங்கிருந்து வருவதையோ அமெரிக்கப் படைகள் தடுக்கவில்லை. அனைத்து அமெரிக்க ராணுவ முற்றுகை முயற்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், அதன் விதிமுறைகள் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அப்பகுதியில் தொடர்ந்து இருக்கும்.
இவ்வாறு அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஹோர்முஸ் ஜலசந்தியில் 60 நாட்களுக்கு கட்டணமின்றி கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹோர்முஸ் ஜலசந்தி பழைய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இதையடுத்து கச்சா எண்ணை, எரிவாயு ஏற்றப்பட்ட கப்பல்கள் தடையின்றி செல்லத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"மத்திய கிழக்கு போர் ஒரு உலகளாவிய பொருளாதார மந்த நிலையாக மாறுவதைத் தடுப்பதற்காகவே எனது நிர்வாகம் ஈரானுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதனால் இந்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்தினேன்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு கிடைத்த ஒரு தீர்க்கமான வெற்றி ஆகும். ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
எனது நிர்வாக அதிகாரத்தின் வரம்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் எனது அதிகாரத்திற்கு எல்லைகள் இல்லை" என்றார்.
இதற்கிடையே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து ஈரான் தலைவர் மொஜ்தபா கமெனி கூறியதாவது:-
"அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஆரம்பத்தில் எனக்குத் தயக்கங்கள் இருந்தன. எனக்கு வேறு ஒரு கருத்து இருந்தது. ஆனால் அதிபர் மசூத்பெசெஷ்கியன் மற்றும் உயர் அதிகாரிகள் அளித்த உறுதிகளைத் தொடர்ந்து அதற்கு ஒப்புதல் அளித்தேன்.
எதிர்காலப் பேச்சு வார்த்தைகளின் போது அமெரிக்காவின் எந்தவொரு அதிகப்படியான கோரிக்கைகளுக்கும் ஈரான் அடிபணியாது என்று பெசெஷ்கியன் என்னிடம் உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் உண்மையான அக்கறை மற்றும் நல்லெண்ணத்துடன் இந்த ஒப்பந்தத்தை உருவாக்க உழைத்தனர். அதே வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் பயன்படுத்தினார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நேரடி பேச்சு வார்த்தைகள் என்பது அமெரிக்காவின் கருத்துக்களை ஈரான் ஏற்றுக் கொள்வதாக அர்த்தமாகாது" என்றார்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்து உள்ளன.