சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஈரான் - அமைதி ஒப்பந்தம் குறித்து அதிபர் பெசெஷ்கியான் பெருமிதம்!

மரியாதையின் நிழலில்தான் அமைதி சாத்தியம்.
சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஈரான் - அமைதி ஒப்பந்தம் குறித்து அதிபர் பெசெஷ்கியான் பெருமிதம்!
Published on

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் நேற்று பிரான்சில் கையெழுத்தானநிலையில், பரஸ்பர மரியாதையின் மூலமே அமைதியை அடைய முடியும் என இஸ்லாமிய குடியரசின் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த ஆவணங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்,

“பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலேயே அமைதி சாத்தியமாகும். ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொண்டே, உலக அமைதி, முன்னேற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் எப்போதும் உறுதியுடனும், நிலைத்தன்மையுடனும் செயல்பட்டு வருகிறது.

எந்தவொரு அச்சுறுத்தலுக்கோ அல்லது அழுத்தத்திற்கோ அடிபணிந்து தனது கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்காத ஒரு தேசத்தின் குரலின் பிரதிபலிப்பே இந்த உரை.

இன்று பதிவுசெய்யப்பட்ட நிகழ்வானது, தேசத்தின் மன உறுதி, அரசியல் முதிர்ச்சி மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ராஜதந்திரம் ஆகியவற்றின் விளைவாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்சின் வெர்சாய்ஸ் மாளிகையில் இருந்தபடியும், ஈரான் அதிபர் பெஸெஷ்கியான் டெஹ்ரானில் இருந்தபடியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். அதனைத்தொடர்ந்து மத்தியஸ்தராக இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கையைழுத்திட்டார்.

கடந்த மூன்று மாதங்களாக மத்திய கிழக்கில் நிலவிவந்த போரை முடிவுக்குக் கொண்டு வர இந்த தற்காலிக ஒப்பந்தம் வழிவகுக்கிறது. அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து விரிவான இறுதி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்ட முடிவு செய்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com