ஈரானின் தென்மேற்குப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த 'தர்கோவின்' (Darkhovin) அணு உலை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஈரான் அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
ஈரானின் தெற்கு மாகாணங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நோக்கத்துடன், தெற்கு ஈரானில் உள்ள முக்கிய பாலங்கள், ரெயில் பாதைகள், மின் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளை அமெரிக்க விமானப்படை தாக்கி வருகிறது.
இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு, பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
பஹ்ரைனிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடந்ததையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் ஏவிய பல ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துவிட்டதாக பஹ்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சர்வதேச வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை ஈரான் முழுமையாகத் தன்வசப்படுத்தியுள்ளதுடன், வர்த்தகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்கள் ஓமன் கடற்கரை வழியாகச் செல்வதற்குப் பதிலாக ஈரானின் கடற்கரையை ஒட்டிய பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தங்களது முன் அனுமதியின்றிப் பயணித்தால் மீண்டும் ஆபத்தை சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு ‘மறக்க முடியாத பாடத்தை’ கற்பிப்போம் என்று ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவரைக் காணவில்லை
இதன் மூலம் இந்தப் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 430க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வீரர்களின் மரணம் மிகவும் துயரமளிப்பதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களை பெற அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.