பொதுவெளியில் தோன்றும் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி.. தந்தை நினைவேந்தலில் பங்கேற்பு?

வரும் ஜூலை 23 அன்று தெஹ்ரானில் ஒரு பெரிய நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
மொஜ்தபா காமேனி, அயதுல்லா காமேனி
மொஜ்தபா காமேனி, அயதுல்லா காமேனி
Published on

கடந்த மார்ச் 8 அன்று ஈரான் உச்ச தலைவரான பின் மொஜ்தபா கமேனி முதல் முறையாக பொது வெளியில் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் உச்ச தலைவராக முதன்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிகழ்ச்சி

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தந்தையும், ஈரானின் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி காமேனியின் நினைவாக, வரும் ஜூலை 23 அன்று தெஹ்ரானில் ஒரு பெரிய நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை வெளியுலகுக்கு வராமல் இருந்த அவர், இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்கவுள்ளார் என ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முகம் சிதைந்துபோய் இருக்கலாம்

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சந்தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனியும் படுகாயமடைந்ததாகவும் அவருக்கு ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மார்ச் 8 நாட்டின் புதிய உச்ச தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பொது வெளியில் தோன்றாமல் அவரது எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. அவர் இறந்துவிட்டதாகவும் சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "அமெரிக்கத் தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் முகம் முற்றிலும் சிதைந்துபோய் இருக்கலாம், அதனால்தான் அவர் வெளியில் வரவில்லை" என்று சந்தேகம் எழுப்பியிருந்தார்.

இந்த சூழலில் கடந்த வாரம் தந்தை அயதுல்லா காமேனி இறுதிச்சடங்கு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்காதது இந்த ஊகங்களை வலுப்பெற செய்தது.

ஊகங்களை மறுத்த ஈரான் அரசு, அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் அவர் பொது வெளியில் தோன்ற உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

சபதம்

நேற்று தனது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்தில் மொஜ்தபா வெளியிட்ட அறிக்கையில்,

"எங்கள் புனிதமான தலைவர் மற்றும் போரில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து தியாகிகளின் தூய இரத்தத்திற்காக, அந்த கொடூரமான குற்றவாளிகளை பழிவாங்குவோம் என நாங்கள் சபதம் செய்கிறோம்.

நாங்கள் அந்த இடத்தில் நேரில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் பழிவாங்கப்படும்.

விரைவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சுதந்திரமான மனிதனும் இந்த தெய்வீகப் பணியின் ஒரு பகுதியை நிறைவேற்றுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com