காசாவில் 5 வயதான பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் பயணித்த காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை முதன்முறையாக இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த ஜனவரி 29, 2024 அன்று காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் பயணித்த கார் தாக்கப்பட்டது.
இஸ்ரேல் ராணுவ பீரங்கியில் இருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஹிந்த் ரஜப்பை தவிர காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
அந்த காரை நோக்கி மொத்தம் 335 தோட்டாக்கள் சுடப்பட்டதும், உள்ளே குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களே இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டதும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
காயங்களுடன் காருக்குள் இருந்தபடியே ஹிந்த், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.
ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடததிய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
ஹிந்த், கடைசியாக காரில் இருந்தபடி பயத்துடன் தனது மழலைக்குரலில் மீட்பு அமைப்பினரிடம் போனில் பேசிய ஆடியோ பின்னர் வெளியாகி உலகையே உலுக்கியது.
வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப் என்ற பெயரில் திரைப்படமும் வெளியாகி சர்வதேச அங்கீகாரம் பெற்றது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் முதல் முறையாக தற்போது வெளிப்படையாக பொறுப்பேற்றுள்ளது
இந்த சம்பவம் மற்றும் இதுபோன்ற பிற பாலஸ்தீனியர்களின் மரணத்திலும் முறையான குற்றவியல் விசாரணையை தொடங்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராணுவத்தின் எச்சரிக்கைகளை மீறி அந்த வாகனம் சென்றதால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவம் குறித்து ராணுவ காவல் குற்ற புலனாய்வுப் பிரிவு விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பவும், தங்களது படைகளின் தவறுகளை தாங்களே ஆய்வு செய்யத் தயார் என்பதை காட்டவுமே இஸ்ரேல் இந்த விசாரணையை தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
'யெஷ் தின்' என்ற இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜிவ் ஸ்டால் கூறுகையில், "ராணுவத்தினருக்கு எதிரான புகார்களில் மிகச் சில வழக்குகளில் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் மிகக் குறைந்த அளவிலான தண்டனைகளே வழங்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.
ஹிந்தின் மரணத்தைத் தவிர, 2025 மார்ச்சில் தெற்கு காசாவின் ராஃபாவில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஐ.நா அமைப்பின் வாகனத்தின் மீது ராணுவம் நடத்திய தாக்குதலும் இந்த விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 2 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒரு ஐ.நா ஊழியர் உட்பட 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.