உலகம்

உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியல்: பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதி முதலிடம்

முதல் முறையாக 5 பேர் கூட்டாக முதலிடம் பெற்றுள்ளனர்.

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஜோர்டானின் அம்மான் நகரில் உள்ள அரச இஸ்லாமிய உத்திசார் ஆய்வு மையம் (RISSC), 'உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள்' பட்டியலை 2009 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அரசியல், மதம், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் சமூகத் துறைகளில் முஸ்லிம் சமூகங்களில் செல்வாக்கு செலுத்திய தனிநபர்களை கவனத்திற்கு கொண்டு வரும் முயற்சி இது.

இதில் நடப்பாண்டுக்கு அடுத்த ஆண்டை அமைப்பு கணக்கிடுகிறது. அதன்படி 2027 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்தப் பட்டியலில், முதல் முறையாக 5 பேர் கூட்டாக முதலிடம் பெற்றுள்ளனர்.

ஐவர் முதலிடம்

முதலிடம் பிடித்த ஐவரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மற்றும் துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோர் அடங்குவர்.

அறிக்கையின்படி, ஐந்து தலைவர்களும் கூட்டாக முதலிடம் பிடித்ததற்கான முதன்மைக் காரணம், பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையேயான மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமே ஆகும்.

பட்டியல்

பட்டியலில் 2, 3 ஆம் இடம் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஐந்தாவது இடத்திலும், ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆறாவது இடத்திலும் உள்ளனர். நியூ யார்க் மேயர் மம்தானி 49வது இடத்தில் உள்ளார்.

ஆண்டின் சிறந்த மனிதர்

காசா மருத்துவர் ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த முறை, பாலஸ்தீனிய குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் ஹுசாம் அபு சபியா '2027ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் ஆவார்.

போரின் போது நோயாளிகள் பொறுமையுடன் இருப்பதையும், கடினமான சூழ்நிலைகளிலும் மருத்துவ சேவைகள் தொடர்வதையும் உறுதி செய்த அவரது முயற்சிகளை பாராட்டி இந்த கௌரவம் அளிக்கப்பட்டது பாராட்டுகிறது.

அவர் 600 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேலிய காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது

ஆண்டின் சிறந்த பெண்

கடந்த பிப்ரவரியில் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரே தயேபே பள்ளியில் நடந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய மாணவியான பாத்திமா ஜஹ்ரா ஷேக்காபாதி, 2027ஆம் ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன், மினாப் குழந்தைகளின் துயரத்தையும் குரலையும் உலகிற்கு எடுத்துரைத்தார்.

SCROLL FOR NEXT