

2050ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் 2075ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என கணித்திருந்தது. இது 2022 இல் அந்த வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை ஆகும்.
இந்நிலையில் அதை திருத்தி அதற்கு காலத்திற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2050 இலேயே பாகிஸ்தான் அந்த இலக்கை எட்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் கனிம முதலீட்டு மன்ற நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார்.
மேலும், நாட்டின் கனிம வளம் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் ஷெஹ்பாஸ் ஷெரீப் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடி, கடன் சுமை ஆகியவற்றால் பாகிஸ்தான் திணறி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. எனவே ஷெபாஸ் ஷெரீப்பின் இந்த கருத்து விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
செம்பு மற்றும் தங்கம் போன்ற நாட்டின் கனிம வளங்களை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு முக்கியத் துறையாக பாகிஸ்தான் கருதுகிறது.
கனிம மூலங்களை வெளிநாடுகளுக்கு சுரங்கம் தோண்டி ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, அவற்றை உள்நாட்டிலேயே பதப்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இதற்காக, உருக்காலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள், கேபிள் மற்றும் மின் கடத்தி உற்பத்தி ஆலைகளை அமைக்குமாறு ஷெஹ்பாஸ் ஷெரீப் முதலீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பலுசிஸ்தானில் உள்ள ரேகோ திக் சுரங்கத் திட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இப்பகுதி, உலகில் இன்னும் மேம்படுத்தப்படாத மிகப்பெரிய செம்பு மற்றும் தங்கப் படிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
2028ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கம் உற்பத்தியை தொடங்கும் என்று ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்தார்.
கனடிய சுரங்க நிறுவனமான பாரிக் மைனிங் இந்த திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் ஆகியுள்ளது. ஆனால் பலுசிஸ்தானின் தனி நாடு கோரும் கிளர்ச்சியாளர்களின் வன்முறை நடவடிக்கைகளால் எழுந்த பாதுகாப்பு கவலைகள் காரணமாக இத்திட்டத்தின் பணிகள் தொய்வடைந்துள்ளது.