‘இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள்’: 165 சிறுமிகள் பலியான கோரம்... குற்றவாளிகளை அறிவித்த ஈரான்

மினாப் பள்ளிமீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவரின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது.
‘இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள்’: 165 சிறுமிகள் பலியான கோரம்... குற்றவாளிகளை அறிவித்த ஈரான்
Published on

இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியது.

இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் உட்பட 165க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காதான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா மறுத்தாலும், பின்னர் பழைய அல்லது தவறான வரைபடத் தரவுகள் காரணமாக, அருகிலிருந்த ராணுவத் தளத்திற்குப் பதிலாகத் தவறுதலாகப் பள்ளி தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமானவர்கள் என, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது.

லெய் ஆர். டேட் (Leigh R Tate) மற்றும் ஜெப்ரி இ. யார்க் (Jeffrey E York) ஆகிய இரண்டு அமெரிக்க அதிகாரிகளின் புகைப்படங்களை இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவில் உள்ள ஈரானிய தூதரகங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளன.

இவர்கள் இருவரும் USS ஸ்ப்ருவான்ஸ் என்ற கப்பலில் இருந்து 'டோமாஹாக்' ஏவுகணைகளை ஏவுவதற்கு மூன்று முறை உத்தரவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

"இந்த இரண்டு குற்றவாளிகளையும் நினைவில் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டு அவர்களின் புகைப்படங்களை ஈரான் தூதரகம் பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com