உலகம்

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அரசு பொது மருத்துவமனையான 'பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகம்' இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு பிரிவில் உள்ள நர்சரியில் 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்தன.

தீ விபத்து

இந்த நிலையில், இந்த காலை 7 மணியளவில் மகப்பேறு பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏ.சி -யின் கம்ப்ரசர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததே இந்த விபத்துக்குக் கரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்ப்ரசர் வெடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீ மளமளவென மகப்பேறு பிரிவு முழுவதும் வேகமாகப் பரவியது.

15 குழந்தைகள் பலி

புகையும் நெருப்பும் சூழந்ததால் வார்டில் இருந்த பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறி அலறின. இந்த கோர விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

நர்சரியில் இருந்த 16 குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது.

விரைந்து வந்த மீட்புக்குழுவினர்

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் வெப்பத்தைத் தணிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

விசாரணைக் குழு

இந்த கொடூர விபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் துணை ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இந்த தீ விபத்து நடந்ததற்கான முழு பின்னணி குறித்து போலீசார் தரப்பில் விசாரணை நடத்தும் என்று மேல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.