அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரை நிறுத்த 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது. இதை மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் மூலம் ஈரானுக்கு தெரிவித்தது.
மேலும், பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மத்தியஸ்தர்கள் மூலம் தகவல் அனுப்புவதாக ஈரான் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை ஈரான் நிராகரித்தது.
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் 5 நிபந்தனைகளை வெளியிட்டது. எதிரியின் தாக்குதல்கள் மற்றும் கொலைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.
மீண்டும் போர் தொடங்காமல் இருக்க உறுதியான செயல்முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
போர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆயுத குழுக்களுக்கு எதிராக நடக்கும் போர் உள்பட அனைத்து தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும்.
ஹார்மூஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் ஈரானின் அதிகாரத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்து உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்து உள்ளார்.
அவர் ஈரான் அரசு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை. ஈரான் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போரிடும்.
தற்போது எதிர்ப்பை தொடர்வதே எங்கள் கொள்கையாக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா பல்வேறு மத்தியஸ்தர்கள் மூலம் தகவல்களை அனுப்புகிறது. ஆனால் அது பேச்சுவார்த்தைகளை குறிக்காது.
போரை ஈரான் நாடவில்லை. மோதலுக்கு நிரந்தர முடிவு வேண்டும். தற்போது பேச்சுவார்த்தைகளை பற்றி பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும். தற்போது நடந்து வரும் மோதல் ஈரானின் போரும் அல்ல, அமெரிக்காவின் போரும் அல்ல. அமெரிக்காவை இஸ்ரேல் போருக்குள் தள்ளிவிட்டு உள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா முன்னுரிமை அளித்து வருகிறது. இஸ்ரேலை பாதுகாக்கவே இப்பிராந்தியத்தில் அமெரிக்கத் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளது.
வரலாற்றிலேயே எந்த வொரு நாடும், மிகப்பெரிய அணு ஆயுத வல்லமை கொண்ட சக்திக்கு எதிராக ஏறக்குறைய ஒரு மாத காலம் உறுதியாக நின்று, அவர்களின் இலக்குகளில் ஒன்றைக்கூட எட்டவிடாமல் தடுத்ததில்லை. ஆனால் அதை ஈரான் செய்து வருகிறது. இது மனிதகுலம் அனைத்திற்குமே பெருமைக்குரிய ஒரு விஷயமாகும்.
இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.