மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மிகவும் தொலைதூர கிராமங்களில் பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக 84 வயதான பார்பரா கரோல் ஒவ்வொரு மாதமும் தனது வாகனத்தில் நன்கொடையாக கிடைக்கும் ஆடைகளை ஏற்றிக்கொண்டு சுமார் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆடைகளை வழங்கி உதவி செய்து வருகிறார்.
பார்பரா கரோல், டோனிப்ரூக் பகுதியில் பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட ஆடைகளை பெற்றுக்கொண்டு அவற்றை தன் வாகனத்தில் ஏற்றி கடினமான பாதைகளை கடந்து தொலை தூரத்தில் வாழும் மக்களுக்கு கொண்டுபோய் சேர்கிறார்.
ஆடைகளை ஏற்றிக்கொண்டு தொலைவில் உள்ள ஊர்களுக்கு பார்பரா செல்லும்போது பெரும் சவால்களை கடக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அவரது வாகனமானது பழுதடைந்துவிடும், சில நேரங்களில் வாகனத்தின் குளிரூட்டியில் சிக்கல்கள் ஏற்படும். இவை பார்பராவிற்கு அசெளகரியத்தையே ஏற்படுத்துகிறது.
சிரமங்கள் இருப்பினும் பயணத்தை தொடரும் அவருக்கு தற்போதுள்ள வாகனத்தில் அதிக அளவு ஆடைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு உதவ வேண்டும் என்பதே பார்பராவின் விருப்பமாக உள்ளது. இதையடுத்து, அவருக்கு பெரிய சரக்கு லாரி ஒன்றை வாங்குவதற்காக அவரது சமூகத்தினர் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புதிய வாகனம் கிடைத்தால் ஒரே பயணத்தில் அதிக அளவு ஆடைகளை எடுத்துச் சென்று, இதுவரை சென்றடைய முடியாத மேலும் பல பகுதிகளுக்கும் உதவ முடியும் என பார்பரா கூறுகிறார்
84 வயதிலும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தனியாக பயணம் செய்து, தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்து வரும் பார்பராவின் சேவை மனப்பான்மை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
தனக்காக வாழ்வதைவிட, தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டுள்ள இந்த மூதாட்டியின் பயணம், மனிதநேயத்திற்கு வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.