மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாகக் கேட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர், டாஸ்மாக் கடையில் இருந்த ‘Paytm' பணப்பரிவர்த்தனை எந்திரத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த மதுபானக் கடையில் விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் குவாட்டர் அளவு கொண்ட மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது, கடையில் இருந்த ஊழியர்கள் அந்த மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் அதிகமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடையின் கல்லாப் பெட்டி அருகே வைக்கப்பட்டிருந்த 'பேடிஎம்' எந்திரத்தைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதைச் சற்றும் எதிர்பாராத டாஸ்மாக் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான பேடிஎம் எந்திரம் இல்லாமல் விற்பனையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், கடை சிறிது நேரம் மூடப்பட்டது.
இதனால் மது வாங்க வந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க நேரிட்டதுடன், மது விற்பனையும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மதுபானக் கடை ஊழியர்கள் உடனடியாக சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடை முன்பு கூடியிருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, போலீஸ் விசாரணைக்குப் பயந்த அந்த வாலிபர், மதுபானக் கடைக்குச் சென்று கொண்டிருந்த மற்றொரு வடமாநில வாலிபரிடம் தான் எடுத்துச் சென்ற பேடிஎம் எந்திரத்தைக் கொடுத்து கடையில் ஒப்படைக்குமாறு அனுப்பி வைத்தார். அதன்படி அந்த எந்திரம் மீண்டும் பாதுகாப்பாகக் கடைக்கு வந்து சேர்ந்தது.
கூடுதல் விலைக்கு மது விற்ற புகாரில் ஏற்பட்ட இந்தச் சுவாரசியமான மற்றும் பரபரப்பான சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.