தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் 80 அடி சாலை பழனியப்பா தெரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் வசித்து வரும் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த் மற்றும் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக், பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மந்தைதெருவில் வசிக்கும் பொதுப்பணித்துறை சென்னை கோட்ட பொறியாளர் முகமது ரபீக் ஆகியோரின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அரசு ஒப்பந்ததாரரான எம்.சி. சங்கர் ஆனந்த் கடந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் 2022ம் ஆண்டு கரூரில் சாலை பணி மேற்கொள்ளாமல் சாலை பணி மேற்கொண்டதாக ரூ.4.5 கோடி பில் தொகை பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் எ.வ.வேலு விவகாரத்தில் சங்கர் ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 2 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
வீடுகளின் ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். காலையில் தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள எம்.சி. சங்கர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.