

கடந்த தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எ.வ.வேலு. திருவண்ணாமலையில் இவருக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் இருந்து 5-வது முறையாக இவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் எ.வ.வேலு வெற்றி பெற்று தி.மு.க. சட்டமன்ற கொறடாவாக உள்ளார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
சட்டமன்றத்தில் அவர் பேசியபோது, ‘மக்கள் பணத்தை தொட மாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம்’ என்று எச்சரித்து இருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது நேற்று அதிரடியாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலைத் துறை என்ஜினீயர்கள் 9 பேர் மீதும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரையை சேர்ந்த கண்ணன், சென்னையை சேர்ந்த பூபாலன், பெரியசாமி, ரபீக் முகமது, சத்யா, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சத்திய பாமா, கோவையை சேர்ந்த நித்திலன், திருப்பூரை சேர்ந்த தீபிகா, திருச்சியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் மீதும் கரூரை சேர்ந்த சங்கராந்த் இன்பிரா என்கிற ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் அடையாளம் தெரியாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பது ஆகிய பணிகள் கரூரை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பணிகளை மேற்கொள்ளாமலேயே 2 தவணைகளாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி மற்றும் 25, 28 ஆகிய தேதிகளில் ஒப்பந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உள்ளது. முதலில் ரூ.7 கோடியும், பின்னர் ரூ.3.23 கோடியும் முறைகேடாக செலுத்தப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அதுபற்றி விசாரணை நடத்தி முதல் நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் எந்தெந்த சாலை பணிகளுக்காக முறைகேடாக பணம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணி அளவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் சென்றனர். பின்னர் அவர்கள் வீடு முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
திருவண்ணாமலையிலும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். 7 குழுக்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். மொத்தம் 13 இடங்களில் 35 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை திருக்கோவில் சாலையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரியிலும் அதே வளாகத்தில் உள்ள எ.வ.வேலுவின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்தும் யாரும் வெளியில் செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. கல்லூரியின் நுழைவு வாயிலை மூடி சோதனை நடத்தப்பட்டது.
எ.வ.வேலுவின் சொந்த ஊர் தண்டராம்பட்டு சே கூடலூர் ஆகும். அங்குள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்து உள்ள நிலையில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.