தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் 28.9.2026 தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவம் நடைபெறும் அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யால், தாய்மையினையும், குழந்தை பிறப்பின் பெருமையையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நிகழும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் முதலமைச்சரால் இன்று மதுரையில் தொடங்கி வைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஜூன் 22-ந்தேதி அதிகாலை 12 மணி முதல், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற, இ-கே.ஒய்.சி. பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரி சான்றிதழ் உள்ளிட்ட ஆறு தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு அடையாளச் சான்று பெற்ற தாய்மாராக இருக்க வேண்டும்.
பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோதிரம் காலை 10 மணி முதல் 1 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என இரு வேளைகளில் வழங்கப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25 பேருக்கும், மதியம் 25 பேருக்கும் மட்டுமே மோதிரம் வழங்கப்படும்.
மேலும் இன்று 28.9.2026 தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவம் நடைபெறும் அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே மோதிரம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழ்கள் நாளை முதல் அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.