தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா ஆளுநருடன் சந்திப்பு

வெங்கட நாராயணா நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா இன்று ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நியமனம்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, தொழிலதிபர் மற்றும் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 26ம் தேதி அன்று அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

கண்டனம்

இந்த நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இவர் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு நெருங்கியவர் என்றும், காவேரி, மேகதாது பிரச்னை சென்றுக்கொண்டிருக்கும்போது, இவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது கண்டனத்திற்க்குரியது எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஐடி விங், கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தவெக அரசு? என கேள்வி எழுப்பியது.

கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது" போன்ற உணர்வை வை ஏற்படுத்துகிறது என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல. கர்நாடகாவில் சென்று தொழில் செய்து வருகிறார். ஆந்திராவை சேர்ந்தவர். அவர் டெல்லிக்கான பிரதிநிதியாக இருக்கப் போகிறார். பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை. முக்கியமான விசயம் என்னவென்றால், கடினமான நேரத்தில் மிகவும் உறுதியாக நின்றவர். மிகவும் நம்பிக்கையானவர். தவறான நபருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை.

கடந்த காலத்தில் பல அழுத்தங்கள் அவருக்கு வந்தன. தலைவர் (விஜய்) மற்றும் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை கூற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டு உறுதியாக நிற்பவர். அவர் பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை, ஒப்புதல் கொடுக்கப்போவதில்லை. மத்திய மற்றும் தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கப் போகிறார். டெல்லியில் பிறந்தவர்கள், அங்கே இருந்தவர்களையெல்லாம் போட்டிருக்கிறார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT