தமிழக செய்திகள்

மக்களின் பிரச்சனைகளை பேசாமல் பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர்- உதயநிதி காட்டம்

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதையெல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார். அவரது உரைக்கு எதிர்க்கட்சிகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, சபையில் கடும் அமளி நிலவியது.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சட்டசபை நிகழ்வுகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது,

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் ஸ்கிரிப்ட்டேட் அவதூறுகளை அள்ளிவீசி முதலமைச்சர் ஆக்ட்டிங் பெர்பார்மன்ஸ் காட்டி இருக்கிறார். பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி சிங்கிள் டேக் -இல் ஸூட் செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையதல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு,விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் போன்றவற்றை பற்றி எந்த பதிலும் கூறப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதையெல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.