சவுமியா அன்புமணி- அமைச்சர் ஆனந்த் 
தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையில் 3-ம் நாள் விவாதம்: சவுமியா அன்புமணிக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர்

வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. 3000 பணியிடத்திற்கு 30 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சவுமியா அன்புமணி கூறினார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க., த.வெ.க. தரப்பில் காரசார விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் போது, தி.மு.க.வினர் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் பேசினார். இதற்கு தி.மு.க.வினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போதுபேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சரும் டென்ஷன் என சொன்னார், அவருக்கும் சி.பி.ஐ. வழக்குகள் உள்ளது என பேசினார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்.எல்.ஏ. சுகுமாருக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்திய த.வெ.க. அரசுக்கு வாழ்த்துகள்.

ஏமாற்றம்

* பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.

* நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பா.ம.க. சார்பில் நன்றி, வாழ்த்துகள்.

* பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

* கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் மிக மிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக் குறைவான தொகை.

* வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும் போது சாப்பாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?

தூர்வார வேண்டும்

* ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* மழை நீர் கடலில் வீணாக கலந்து விடுகிறது.

* 10 கி.மீ. ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தடுப்பணைகள் மூலம் 100 டிஎம்சி நீரை சேமித்து வைக்கப்படும்.

* ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

* தமிழ்நாட்டில் உள்ள 27ஆயிரம் குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும்.

* நீர் இல்லையென்றால் விவசாயிகள் எப்படி விவசாயம் செய்வார்கள்?. ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.

* நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

* வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. 3000 பணியிடத்திற்கு 30 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.

* தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டுவர வேண்டும். தனியார் துறையிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தேவை.

* தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றார்.

நடவடிக்கை

சவுமியா அன்புமணிக்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில், நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட த.வெ.க. அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம், விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனிடையே, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி அளித்தார்.

இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.