தமிழக செய்திகள்

சிறையில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்க - சட்டத்துறை அமைச்சரிடம் சிபிஎம் மனு

இதுவரை நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளுக்கான சட்டப்படியான, நியாயமான மற்றும் உரிமையான இந்த 60 நாட்கள் ஃபர்லோ என்ற விடுப்பை அளிக்கவில்லை.

10 முதல் 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாகவும் சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளுக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறையில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யக் கோரி தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மனு அளித்தார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

நீண்ட கால சிறைவாசிகள், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். சட்டப்படியான அவர்களின் நிரந்தர விடுதலைக்கு போராடி வருகின்றனர். அதற்கான கோரிக்கை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அரசு நடவடிக்கை எடுக்காததால், நீதி பேராணைகள் தாக்கல் செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அவ்வப்போது இடைக்கால விடுமுறை அளித்து வந்து, இறுதியாக, 19.11.2025 தேதியிட்ட உத்தரவில், அரசு நிரந்தர விடுதலைக்கான மனுக்களில் உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால விடுப்பை அரசே வழங்கலாம் என்றும் கூறியது.

நீண்ட கால சிறைவாசிகள் குறித்த முன் விடுதலை, பரோல் என்ற தற்காலிக விடுப்பு அதற்கான விதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாமல், நீண்ட கால சிறைவாசிகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில், ஃபர்லோ (Furlough) என்ற நீண்ட விடுமுறை கிடைக்கும் வகையில், 14.2.2026 தேதியிட்ட அரசாணை எண் 82 ஐ வெளியிட்டது.

இதன்படி, நீண்ட கால சிறைவாசிகள் சிறை கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்க, அவர்கள், சம்பந்தப்பட்ட காவல்நிலையம், மாவட்ட ஆட்சியரிடம் நடத்தை குறித்து அறிக்கை பெற்று, சிறைத்துறை தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பரிந்துரை செய்ய, அவர் பிரிவு 6 (1) இன் கீழ் 60 நாட்களுக்கு ஃபர்லோ என்ற விடுமுறை வழங்குவார்.

தற்காலிக விடுமுறையை அரசு வழங்க வேண்டும்

அதன் பிறகு, சிறைவாசி மற்றும் ஒரு 60 நாட்களுக்கு விண்ணப்பிக்க, சிறை கண்காணிப்பாளர், நன்நடத்தை பற்றி அறிக்கைகள் பெற்று, சிறைத்துறை தலைமை அதிகாரி மூலம் அரசு உள்துறை மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்ய, சிறைவாசிகளுக்கு, பிரிவு 6 (2) இன் கீழ் மேலும் 60 நாட்கள் ஃபர்லொ என்ற விடுமுறையை அரசு வழங்க வேண்டும்.

இதன் அடிப்படையில், கடந்த ஆட்சியில், கோவை, பாளையங்கோட்டை, புழல் மத்திய சிறைகளில் 28 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள 15 முஸ்லிம் சிறைவாசிகளுக்கு 26.2.2026 முதல் 13.3.2026 வரையிலான உத்தரவுகள்படி தலா 60 நாட்கள் ஃபர்லொ என்ற விடுப்பு வழங்கப்பட்டது. அது முடிந்து அனைவரும் சிறைக்கு மீண்டும் சென்றுவிட்டனர்.

தற்போது மேலே சொன்ன அரசாணை பிரிவு 6(2) இன் கீழ் மேலும் 60 நாட்கள் ஃபர்லொ வழங்க கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளுக்கான சட்டப்படியான, நியாயமான மற்றும் உரிமையான இந்த 60 நாட்கள் ஃபர்லோ என்ற விடுப்பை அளிக்கவில்லை.

முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பரிந்துரை செய்யப்பட்ட பிறகும் இந்த கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர், நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு உடனடியாக ஃபர்லொ விடுப்பு வழங்கவும், நீண்ட கால சிறைவாசம் என்பதை கவனத்தில் கொண்டு விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரிக்கால் தொழிலாளர்களை முன்கூட்டியே விடுதலை செய்கதனை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத் தலைவர் யுவராஜ் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கோவை பிரிக்கால் நிறுவனத்தில் மனிதவள அதிகாரி மரணத்தையொட்டி பதியப்பட்ட வழக்கில் கே.மணிவண்ணன், மற்றும் இ.ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். எனவே, கருணை, மனிதாபிமான அடிப்படையில், அரசியலமைப்பு பிரிவின் அடிப்படையில் சட்டத்தின் 161வது இவ்விரு தொழிலாளர்களையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

என்று தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT