

நாகூரில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு சார்பில் சந்தனக்கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா அறங்காவலர்களிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து சந்தனக்கட்டைகள் வழங்குவதற்கான அரசாணையை பெற்ற பின் அமைச்சர்கள் ஷாஜகான், ஆர்.வீ.ரஞ்சித் குமார், பர்வேஷ் ஆகியோருடன் நாகூர் தர்கா அறங்காவலர்களும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஷாஜகான், நாகூரில் நவம்பர் 10-ந்தேதி முதல் நடைபெற இருக்கும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் விஜய் வழங்கி இருப்பதாக கூறினார்.
மொத்தமாக உள்ள 11 அறங்காவலர்களில் 8 அறங்காவலர்கள் முதலமைச்சரை சந்தித்து இந்த அரசாணையை பெற்றிருப்பதாகவும், இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆய்வுகூட்டத்தை நாளை நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் சந்தனக்கட்டைகள் வழங்குவதற்கான அரசாணையை கட்சி நிர்வாகியின் மூலம் வழங்குவதாக எழுந்திருக்கும் புகார் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சந்தனக்கூடு திருவிழாவில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லை எனவும், தவறான புரிதல் காரணமாக தவறான செய்தி வெளியாகியிருப்பதாக கூறிய அமைச்சர் ஷாஜகான், நாகூர் தர்காவில் யானை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுப்பதாகவும் முதலமைச்சர் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.