தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததாக உதயநிதி, எடப்பாடி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
ஈரான் போர், வறட்சியே காரணம் என அமைச்சர் விளக்கி, ரேஷன், பசுமை கடைகள் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றது. இதனால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசிய பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் கூட விலை வாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியில் சிறப்பு பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தி பருப்பு, ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கபட்டது.
இந்த ஆட்சியில் மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு, இன்றைக்கு 75 ரூபாயாக விற்பனை ஆகிறது.
மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய் இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய் இன்றைக்கு கிலோ 180 ரூபாய்.
மே மாசம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40 இன்னைக்கு ஒரு கிலோ 70 ரூபாய் வரை வந்துள்ளது.
எனவே முதல்-அமைச்சர் தலைமையில் நிதி, உணவு கூட்டுறவு உள்ளிட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்ற அளவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி விலைவாசி உயர்வை கட்டுபடுத்த உடனடியாக நல்ல தீர்வை காண வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தல்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ. 20 வரை உயர்ந்து விட்டது சர்க்கரை ஒரு கிலோ 48 லிருந்து 72 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மஞ்சள் ஒரு கிலோ 200 ல் இருந்து 250 ஆகவும் மிளகாய் கிலோ ரூ.200 ல் இருந்து 300 ஆகவும் வெல்லம் ஒரு கிலோ 55 லிருந்து 75 ஆகவும் புளி கிலோ ரூ. 150 ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது இங்கும் வறட்சி ஆந்திராவிலும் வறட்சி. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்துவிட்டது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து கணேஷ்குமார்(பா.ம.க ) தாரகை கத் பட், (காங்கிரஸ்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) செல்ல சுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோரும் விலைவாசி உயர்வு பற்றி எடுத்துச் சொன்னார்கள்.
இதைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:- ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் விலை வாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நம் மாநிலத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் விலைவாசி ஏறி உள்ளது. எனவே 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியா வசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எந்த பொருள் விலை அதிகமாக இருக்கிறதோ அதனை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.
அரிசி சர்க்கரை உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களையும் விலையையும் மானிட்டர் செய்கிறோம். மக்களுக்கு தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம்.
இதனால் வாரா வாரம் எந்த பொருளின் விலை அதிகமாகிறது என்பதையும் கண்காணிக்கிறோம்.
எனவே ரேசன் கடைகள் மட்டுமல்லாமல் பசுமை கடைகள் மூலமாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும்.
எனவே விலைக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர்.