தமிழக செய்திகள்

தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து இ.பி.எஸ். ஆலோசனை

கோவை, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை

2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து என்று ஏற்கனவே ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி தற்போது இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி மாலை 4.30 மணிக்கு வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

சந்திப்பு

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். நாளை திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இதுவரை காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கோவை, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

2026 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இதனால் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.