தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு

2 தொகுதிகளிலும் சேர்த்து 99 பேர் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து உள்ளனர்.

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

5 முனைப்போட்டி

இந்த 2 தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் களம் இறங்கி உள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளராக சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளராக பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக லட்சுமணன் போட்டியிடுகிறார்கள்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை

இந்த 2 தொகுதிகளிலும் சேர்த்து 99 பேர் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து உள்ளனர். அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது.

இந்நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்திய பாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

நாளை மறுநாள் (19-ந்தேதி) வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

தீவிர பிரசாரம்

இதற்கிடையே 2 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது த.வெ.க. வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கடந்த தேர்தலில் இவரை பின் தொடர்ந்து த.வெ.க. வேட்பாளரும் அதிக வாக்குகளை பெற்று இருந்தார். இந்த தொகுதியில் தி.மு.க. 3-வது இடத்தையே பெற்று இருந்தது. இதன் காரணமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க., த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தாராபுரம் தொகுதி

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்த தொகுதியில் த.வெ.க. 3-வது இடத்தையே பிடித்து இருந்தது. இதனால் அங்கு வெற்றி பெறுவதற்கு த.வெ.க. தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது.

இதற்கிடையே 2 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வும் காய் நகர்த்தி வருகிறது.

அடுத்த வாரம்

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் தொகுதிகளுக்கு நேரில் சென்று தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் 2 தொகுதிகளிலும் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். இதன் மூலம் தேர்தல் களம் விரைவில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT