ரேஷன் அரிசி 
தமிழக செய்திகள்

ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்துவதா?- சட்டசபையில் காரசார விவாதம்

தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது என எ.வ.வேலு கூறினார்.

டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

எம்எல்ஏ கே.என்.நேரு :- சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை என்றார்.

எம்எல்ஏ எ.வ.வேலு :- சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் ரேஷன் கடைகளில் தரப்படுகிறது. சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம். தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது. அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?. ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில், ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்: ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி:- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது. ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும்.

அமைச்சர் வெங்கட்ரமணன்

டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும். தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது. ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும். பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை. இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசி ரேஷனுக்கு வாங்கப்படும் என்றார்.