ரேஷன் அரிசி கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

நம் சட்டமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசியை சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும்.
Adhav Arjuna
Published on

தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.

ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி வழங்கிட நடவடிக்கை

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் உயர்தரமான அரிசி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். ரேஷன் அரிசி பெரும் பகுதி இட்லி மாவு தயாரிக்க மட்டுமே பயன்படும் நிலையைக் குறிப்பிட்டு, மக்கள் நேரடியாகச் சமைத்து உண்ணக்கூடிய சன்ன ரக அரிசியை வழங்கிடவே சன்ன ரக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம்

விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாம் சிறுவயதில் இருந்தபோது ரேஷன் கடைகளில் நிறம் மாறிய அரிசியே கிடைத்தது. நம் சட்டமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசியை சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும். 90 சதவீத மக்கள் ரேஷன் அரிசியை நேரடியாகச் சமைப்பதில்லை.

இந்நிலையை மாற்றவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுச் சமைக்க உகந்த சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.

மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார். எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைத்தார். ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார்.

மேலும், இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை. எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா? எம்எல்ஏவுக்கே உடல்நிலை சரியில்லை என்றால் கூட சிங்கப்பூர் செல்கின்றனர்.

இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும். இவ்வாறாக சட்டப்பேரவையில் உணவுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தில் ரேஷன் அரிசி தரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com