தமிழக செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை 4 மணிக்கு முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு 8 கால பூஜைகள் நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று மாலை வரும் முதலமைச்சர் விஜய் 4.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்கிறார்.

த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் விஜய் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதலமைச்சர் விஜய் புறப்படுகிறார்.

கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், ஜடாமுனி கோவில் தெரு வழியாக மீனாட்சி அம்மன்கோவில் கிழக்கு நுழைவு வாயிலை அடைகிறார். அதனை தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு கோவிலுக்குள் அழைத்து செல்லப்படுகிறார்.

அண்மையில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மீனாட்சி அம்மன் கோவில் புதுபொலிவுடன் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வரும் முதலமைச்சர் விஜய் பொற்றாமரை குளம், அம்மன், சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூஜையின்போதும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு பூஜையிலும் தரிசனம் செய்யும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இன்று மாலை கோவிலுக்கு வரும் முதலமைச்சர் விஜய் 4.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்கிறார். இந்த பூஜையின்போது பஞ்ச தசி வடிவத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பார். அப்போது அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 30 நிமிடம் அம்மன், சுவாமி சன்னதிகளில் முதலமைச்சர் விஜய் வழிபடுகிறார்.

கோவிலுக்கு வரும் அவருக்கு அண்மையில் புதிதாக அசாமில் இருந்து வாங்கி வந்த துர்கா என்ற யானை மூலம் மாலை அணிவித்து முதலமைச்சரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சித்திரை வீதிகள் மற்றும் கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கோவிலுக்குள் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT