தமிழக செய்திகள்

காங்கிரஸ் கூட்டணியா அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரமா என்பதை முதலமைச்சர் முடிவெடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

முதலமைச்சரின் நீலிக்கண்ணீர் வடிக்கும் நாடகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்காது

காங்கிரஸ் உடனான கூட்டணியா அல்லது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமா என்பதை நாளை புதுடெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவ்லைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவலனாக விளங்க வேண்டிய முதலமைச்சர் தனது ஆட்சி அதிகாரத்திற்காக சுயநலத்தோடு தன் கடமையிலிருந்து தவறி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்து வருவதே, கர்நாடக முதல்வர் சிவகுமார் அவர்கள் மேகதாது விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு அத்திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக முதலமைச்சர் பேசியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, கடுமையான கண்டனத்திற்கும் உரியதாகும்.

கர்நாடக முதல்வரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்

காவிரி விவகாரத்தில் கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும், மேகதாது அணையைக் கட்டி காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தே தீருவோம் என்ற கர்நாடக மாநில முதலமைச்சர் .டி.கே. சிவக்குமார் பேச்சு ஆணவத்தின் உச்சம்.

மத்திய ஜல்சக்தி அமைச்சரைச் சந்திப்பது, மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்திற்கு வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுப்பது, அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனச் சவால்விடுவது என அடுத்தடுத்து அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட முடியாத அளவிற்கான ஒரு முதலமைச்சர் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது சாபக்கேடு

தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையில் சட்டத்திற்குப் புறம்பாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில முதலமைச்சரின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான துணிவோ, திராணியோ இல்லாத தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள், "செங்கல்லை வைக்க விட மாட்டோம்; சிமெண்ட் பூச முடியாது" என வீர வசனம் பேசிக் கொண்டிருப்பது அரசியலின் அக்மார்க் கோமாளித்தனமாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களிடம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இவ்வளவு முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்கக் கிடைத்த வாய்ப்பைக்கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல்,

Reels content-க்காக விருந்து, Café எனப் பொழுதைக் கழித்து வீணடித்துவிட்டு, தற்போது பாரதப் பிரதமர் அவர்களுக்கு மேகதாது அணைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கடிதம் எழுதி நீலிக்கண்ணீர் வடிப்பது எந்த வகையில் நியாயம்?

அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்

எனவே, நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த முறையாவது காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கர்நாடக முதலமைச்சருக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுத்து, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பையும் தனது ஆட்சி அதிகாரத்திற்காகத் தவறவிடுவாரேயானால்,

அது தமிழக விவசாயிகளுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT