புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழும்- நாராயணசாமி பேட்டி

கூட்டுறவு வங்கி நஷ்டம் அடைந்து மூடுவிழாவுக்கு செல்ல காரணம் அதிக ஆட்களை முதலமைச்சர் ரங்கசாமி வேலைக்கு வைத்ததுதான்.
நாராயணசாமி
நாராயணசாமி
Published on: 
Summary

புதுச்சேரியில் காவல்துறை ஊழலில் மூழ்கிவிட்டது. சட்டம் ஒழுங்கு மோசமாகி கொலை நகராகி விட்டது. மக்கள் பயத்தில் உள்ளனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வயது தளர்வு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டுகள் வயது தளர்வை தந்துள்ளார். அதுபோல் புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி 5 ஆண்டுகள் வயது தளர்வை தரவேண்டும்.

ஏனெனில் கடந்த முறை ஆட்சியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவதாகக்கூறி 2 ஆயிரம் பேருக்குகூட வேலை தரவில்லை. அரசு பணிக்கு விண்ணப்பிக்க வயது தளர்வு தந்து வாய்ப்பு தரவேண்டும்.

வெள்ளை அறிக்கை

கூட்டுறவு வங்கி நஷ்டம் அடைந்து மூடுவிழாவுக்கு செல்ல காரணம் அதிக ஆட்களை முதலமைச்சர் ரங்கசாமி வேலைக்கு வைத்ததுதான். இதற்கு முழு பொறுப்பும் ரங்கசாமிதான். கூட்டுறவு வங்கி விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

புதுச்சேரியில் காவல்துறை ஊழலில் மூழ்கிவிட்டது. சட்டம் ஒழுங்கு மோசமாகி கொலை நகராகி விட்டது. மக்கள் பயத்தில் உள்ளனர். நிர்வாகமே நடக்கவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உயிரை கையில் பிடித்து நடமாடுகின்றனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்த விஷயத்தில் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன கருத்து தவறானதுதான். ஆனால் புதுச்சேரியில் என்ன நடக்கிறது என பாருங்கள். மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி முதலமைச்சர் செயல்படவில்லை.

அமைச்சர்கள் சதி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு கெட்டப்பெயர் வர அமைச்சர்களே சதி செய்கிறார்கள். புதுச்சேரியில் அமைச்சர்கள் தூக்கத்தில் உள்ளனர். நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. நேரம் வரும்போது எந்த அமைச்சர்கள் சதி செய்கிறார்கள் என்பதை தெரிவிப்பேன்.

பனிப்போர்

புதுச்சேரியில் கவர்னர்- முதலமைச்சர் இடையில் பனிப்போர் நடக்கிறது. எந்த வேலையும் நடக்கவில்லை. கோப்புகள் தூங்குகிறது. இந்த ஆட்சி 5 ஆண்டு நீடிக்குமா என்பது மக்கள் மத்தியில் வந்துள்ளது. அதற்கு காரணம் ஸ்திரதன்மை இல்லாத நிலைதான். கவர்னர் கொள்ளையடிக்க தடையாக இருக்கிறார். அதனால் ஆட்சியாளர்கள் கவர்னரை எதிர்க்கிறார்கள். ஆட்சி அமைந்து 6 மாதமான போதும் புதிய திட்டங்கள் ஏதும் வரவில்லை. ஆட்சி கும்பக்கர்ண தூக்கத்தில் உள்ளது.

அரிசி போடமுடியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா, அபின் உலவுகிறது, லஞ்சத்தில் திளைத்துள்ளனர். மோசமான ஆட்சி நடக்கிறது. கொலைகள் இவ்வளவு நடந்தும் முதலமைச்சரோ, துறை அமைச்சரோ வாய் திறக்கவில்லை. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும்காலம் விரைவில் வருகிறது. ஆட்சி நீடிக்காது விரைவில் கவிழும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X