சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக தி.மு.க. கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார்.
தமிழக சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவை ரீல்ஸாக வருகின்றன என கே.என்.நேரு கூறுகையில், சபை நேரலை இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களை ஈர்த்துள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வாரத்தில் உரிமை மீறல் குழு தேர்வு நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
மேலும் சபாநாயகர் கூறுகையில், கூச்சல், குழப்பம் ஏற்படும் போது எம்.எல்.ஏ.க்களை கொடறாக்கள் கட்டுப்படுத்த வேண்டும். உட்காருங்கள் என்று பல முறை நான் கூறிய பின்னும் ஓ.எஸ். மணியன் நின்று கொண்டே இருக்கிறார். சட்டசபை இருக்கையை விட்டு எழுந்து வந்து ஓடி வருவது தவறு என்றார்.
இதற்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு பேசுகையில், நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பேரவை தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு நிற்கலாம், கை தூக்கலாம். உறுப்பினர்களின் குரல் சபாநாயகருக்கு கேட்காத போது முன்னால் வந்து சொல்கிறார்கள் என்றார்.
சபாநாயகர் பேசுகையில், கையை உயர்த்துவதில் தவறில்லை. என் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் குரல் கொடுப்பதில் தவறில்லை. நான் சொல்வது ஒரே நேரத்தில் பத்து, பதினைந்து பேர் எழுந்து நின்று குரல் கொடுத்து இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பரிந்துரைப்பது தேவையில்லை. நானே பார்த்து பார்த்து யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் வாய்ப்பு தருகிறேன். இருக்கையை விட்டு எழுந்து ஓடி வருவது தவறு என்று தான் சொல்கிறேன் என்றார்.
திமுக கொறடா எ.வ.வேலு, பேரவைத் தலைவர் சொல்வது எப்போதும் விதிக்குட்பட்டு தான் சொல்கிறீர்கள். நாங்களும் விதிக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். சில நேரங்களில் எங்களுடைய பக்கத்தில் இருக்ககூடிய உறுப்பினர்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உதவியா இருந்து சொல்கிறார்கள். அதுதானே தவிர வேறொன்றும் இல்லை. இதே பேரவையில் பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்க்க பெஞ்ச் மேல் ஏறி நின்று இரண்டு கையை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றார்.
உடனே சபாநாயகர் நீங்கள் சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன். பத்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, இத்தனை ஆண்டு காலமாக இங்கே இருந்து கையை மட்டும் உயர்த்தினால் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று நாங்கள் நம்பிக்கொண்டு இருந்தோம். இன்றைக்குதான் பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என அண்ணன் எவவேலு மூலம் அறிய கருத்தை புதிய வழிமுறையை எங்களுக்கு காட்டிக்கொடுத்து இருகிறார் என்றார்.
பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன். சபாநாயகர் இருக்கையில் முன்பு அமர்ந்தது போல் அமரால் இருந்தால் அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்ற போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார்.