குன்னூர் விநாயகர் கோவில்- அமைச்சர் ரமேஷ்
தமிழக செய்திகள்

நேற்று விவாதம், இன்று நடவடிக்கை: ரூ. 15 கோடி மதிப்பிலான குன்னூர் விநாயகர் கோவில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து- அமைச்சர் ரமேஷ் உத்தரவு

குன்னூர் விநாயகர் கோவிலின் 15 கோடி ரூபாய் நிதியில் கட்டப்ப்பட இருந்த மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் வருமானம் கோவிலின் புனிதமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. நேற்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, கோவில் நிதி புனிதமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக கொள்கை ஒத்துள்ளது. திருமண மண்டபங்கள், பல அடுக்கு வாடகை கட்டிடங்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது கல்வி நிலையம் போன்றவற்றிற்கும் பொருந்துமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எழுந்து பதில் அளித்தார். கல்வி நிலையம் போன்றவற்றை நிறுத்த திட்டமில்லை. கோவில் நிதியில் இருந்து திருமண மண்டபம் போன்ற கட்டிடங்கள் கட்ட மட்டுமே அனுமதியில்லை என்று கூறிய அவர், நீதிமன்றம் தடை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சில பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.

மேலும், குன்னூர் விநாயகர் கோவிலுக்கு மாதத்திற்கு சராசரியாக 500 பக்தர்களே வரும் நிலையில், அங்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதியே இல்லை. அப்படி இருக்கும்போது 10 கோடி ரூபாய்க்கு மேல் மல்டிலெவல் கார் பார்க்கிங் எதற்கு? என்றார். உடனே முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எழுந்து, மக்களர் விருப்பத்தின் பேரில் நகராட்சி கேட்டுக் கொண்டதன் பேரில் சட்ட விதிகளின் அடிப்படையில கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார். அதற்கு ரமேஷ், மக்கள் அடிப்படை தேவைகளை மட்டுமே கேட்கின்றனர். மல்டிலெவல் கார் பார்க்கிங் கேட்கவில்லை என்றார்.

இந்த நிலையில் 15 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். 2024-2025 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டம் தொடங்கப்படாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகளுக்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.