அ.தி.மு.க.வில் அக்கட்சி யின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
தமிழக சட்ட சபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக அவரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் செயல்பட்டனர். வாக்கெடுப்பிலும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இது அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதன் பிறகு எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தனியாக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் அணுகு முறையே காரணம் என்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் எஸ்.பி. வேலுமணி கடந்த சில நாட் களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இதுபற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் எஸ்.பி.வேலுமணி 2 கோடி தொண்டர்களில் ஒருவர் என்றும்,அவர் கூறுவதை பற்றி என்னிடம் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு எஸ்.பி. வேலுமணி காட்டமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2 கோடி தொண்டர் களுள் ஒருவன்தான் வேலு மணி. என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதைவிட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது?
அ.தி.மு.க. தொண்டன் என்பதுதான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.
என்னை தொண்டரில் ஒருவன் என்று சொன்ன அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டு வரப்பட்டுதான் தாங்கள் இன்றைக்கு பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்தத் தொண்டன்தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும்.
அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பதுதான் ஒரு தலைமைக்கு அழகு.
கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் எம்.ஜி.ஆர். இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு ஜெயலலிதாவின் கான்வாயே வந்து நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத்தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள், மதித்தார்கள்.
இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே, 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்.
வி.கே.சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற முன் வந்தார்கள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தி.மு.க.வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை, தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்றுதான் பல முயற்சிகளை எடுத்தார்கள்.
அதேபோல், இன்றைக்கு அமைச்சராக இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், பேரவைத் தலைவராக உள்ள ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால்தான் எல்லோரும் த.வெ.க.விற்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, நீங்கள் எப்போதும் போல உதாசீனப்படுத்தி அனுப்பி வைத்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் எப்போதும் நான் கேட்பது ஒன்றுதான். வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.