விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி மாற்றங்களை செய்து உள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி த.வெ.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி. விஜயபாஸ்கரும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளார்.
இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி மாற்றங்களை செய்து உள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக பழனிவேல் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் உள்ள மற்ற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட அளவில் அவைத் தலைவர், இணைச் செயலாளர்கள் ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று புரட்சி தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அண்ணா தொழிற் சங்கம், விவசாய அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி உள்ளிட்டவற்றுக்கும் புதிய மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம், கிழக்கு, மேற்கு என செயல்பட்டு வந்தது. இந்த ஒன்றியத்தை நிர்வாக வசதிக்காக கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம் என 3 ஆக பிரித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த 3 ஒன்றியத்துக்கும் புதிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்கும் பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.வினர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.