இந்தியா

கஷ்ட காலத்தில் கைதூக்கியவர் மம்தா.. அதிருப்தி குழுவில் இணைய மறுத்து சத்ருஹன் சின்கா அதிரடி

20 மக்களவை எம்பிக்கள் பாஜகவின் என்டிஏவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவிபட்டது. 52 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து எதிர்க்கட்சி பொறுப்பை கைப்பற்றியது.

அதிருப்தி

அவர்களுடன் மேலும் சில இணைந்து தற்போது கிளர்ச்சி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. அக்கட்சி நடப்பு தேர்தலில் 80 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அவர்கள் தாங்கள் திரிணாமுல் காங்கிரஸிலேயே தொடர்வதாக அவர்கள் தெரிவித்தபோதும் எந்நேரமும் ஆளும் பாஜகவுக்கு ஆதரவு தரலாம் என்ற சூழல் நிலவுகிறது.

அதேநேரம் ஒரே வாரத்தில் சுகேந்து சேகர் ராய், சுஸ்மிதா தேவ், மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகிய 3 முக்கிய திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ள சூழலில் திரிணாமுலின் 20 மக்களவை எம்பிக்கள் பாஜகவின் என்டிஏவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

தீதி

அவ்வாறு செல்லும் எம்பிகளில் பாலிவுட் நடிகரும் மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான சத்ருஹன் சின்ஹாவும் ஒருவர் என்ற பேச்சு நிலவியது.

இந்நிலையில் தான் எந்தவொரு அதிருப்தி குழுவிலும் இல்லை என்றும், இறுதிவரை கட்சித் தலைவி மம்தா பானர்ஜியுடன்தான் பயணிக்கப் போவதாகவும் சத்ருஹன் சின்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டியில், "கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாட்னா சாஹிப் தொகுதியில் நான் தோல்வியடைந்து, எனது அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய இக்கட்டான சூழலைச் சந்தித்தபோது, எனக்கு மறுவாழ்வு கொடுத்து அரவணைத்தவர் 'தீதி' மம்தா பானர்ஜி.

அவரது அன்பான அழைப்பின் பேரில் தான் நான் மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்வானேன். அசன்சோல் மக்களின் இந்த வெற்றிக்கு மம்தாவும், திரிணாமுல் கட்சியும்தான் காரணம்.

எனது கஷ்ட காலத்தில் எனக்குத் துணையாக நின்ற மம்தா பானர்ஜி, இன்று உட்கட்சிப் பூசல்களால் தனது அரசியல் வாழ்க்கையின் கடினமான சூழலைச் சந்தித்து வருகிறார்.

இந்த நேரத்தில் அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கனவிலும் இல்லை. அது மனிதாபிமானமும் அல்ல. அவர்களுக்குத் துணையாக நிற்பதே எனது தார்மீகக் கடமை" என்று தெறிவித்துள்ளார்.