

மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற அளவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மம்தாவுக்கு எதிராகத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, கட்சியை விட்டு வெளியேறி வருவது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான மாநிலங்களவை எம்பி சுஷ்மிதா தேவ், தனது எம்பி பதவியையும், கட்சிப் பொறுப்பையும் நேற்று (ஜூன் 10) ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த கையோடு, புதுடெல்லியில் உள்ள அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தான் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைக்க விரும்பவில்லை" என்றும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்காளத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை காரணமாக குறிப்பிட்டுள்ளர்.
கடந்த திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்பியான சுகேந்து சேகர் ராய் ராஜினாமா செய்திருந்த நிலையில், சுஷ்மிதா தேவ் விலகியிருப்பது மம்தாவுக்கு விழுந்த இரண்டாவது பெரிய அடியாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் மொத்தம் 28 எம்பிக்கள் உள்ளனர்.
அவர்களில் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட சாயோனி கோஷ், மூத்த தலைவர் மாலா ராய், சதாப்தி ராய், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், நடிகை ரச்னா பானர்ஜி உள்ளிட்ட 19 முக்கிய எம்பிக்கள் அதிருப்தி குழுவில் உள்ளனர்.
இந்த அதிருப்தி எம்பிக்கள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரைச் சந்தித்து, தாங்களே 'உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்' நாடாளுமன்றக் குழு என்று உரிமை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இந்த உடைப்புக் குழுவினர் விரைவில் பாஜக தலைமையிலான NDA அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகள் உடைந்தபோது பெரும்பான்மை எம்எல்ஏ-க்களை வைத்திருந்த குழுவிற்கே தேர்தல் ஆணையம் அசல் சின்னத்தையும் கட்சியையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.