

மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பதவிவகித்த மம்தா பானர்ஜி 1997-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பின், மாநில தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 1998 ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார். 2011-ல் நடந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சியை மம்தா பானர்ஜி கைப்பற்றினார்.
மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. தோல்வி எதிரொலியாக அக்கட்சிக்குள் மோதல் வெடித்தது. மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதன்பின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இணைப்பது குறித்து சோனியா காந்தி, மம்தாவிடம் கேட்டதாகவும், அதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என மம்தா கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. இது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் இணைப்பு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள். தேசிய பிரச்சனைகளை மேலும் திறம்பட முன்வைப்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர் என தெரிவித்தார்.