நீட் மறுதேர்வு  
இந்தியா

நீட் மறுதேர்வில் பங்கேற்காத 2 லட்சம் மாணவர்கள் - NTA தகவல் - ரிசல்ட் குறித்தும் அப்டேட்

நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதிக்குள் வெளியாகும்.

வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து மே 3 அன்று நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடைபெற்றது.

மே 3 மற்றும் ஜூன் 21 இடையிலான காலத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த சுமார் 21 மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டனர்.

மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 22,05,035 மாணவர்கள் எழுதிய நிலையில், ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட மறுத்தேர்வில் வெறும் 20 லட்சம் மாணவர்கள் மட்டுமே பங்கேற்றதாக, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மே 3 தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 9 சதவீதம் ( சுமார் 2 லட்சம் மாணவர்கள்) மறுத்தேர்வில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

காரணம்

நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் பலர் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வை எழுதியதாகவும் அதில் நல்ல மதிப்பெண் பெற்றதால் நீட் மறுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம் என தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மே 3 தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்தால் ஏற்பட்ட மன உளைச்சலால் பலர் தேர்வு எழுதாமல் தவிர்த்தனர் என பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. பல மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை கைவிட்டு வேறு படிப்புகளுக்கு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

நீட் மறுதேர்வு ரிசல்ட்

இதனிடையே ஜூன் 21 நடந்த மறுதேர்வில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

முன்னதாக ஜூன் 25-ஆம் தேதி தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதில் மாணவர்கள் ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 28 வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மொத்தம் 10 ஆயிரம் ஆட்சேபனைகள் பெறப்பட்டன.

இதை ஆய்வு செய்து விரிவான இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை அதிகாரி ஒருவர் கூறுகையில், கலந்தாய்வு தாமதமாகும் என மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. வழக்கமாக தேர்வு முடிந்து 45 நாட்களுக்கு பிறகே முடிவுகள் வெளியாகும் நிலையில் இந்த முறை 37 நாட்களிலேயே முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.