CJP RALLY 
இந்தியா

CJP பேரணி மோதல்: 118 போலீசார், 60 போராட்டக்காரர்கள் காயம்.. 70 பேர் கைது

சோனம் வாங்சுக் தன் உண்ணாவிரதத்தை 23வது நாளாக தொடர்ந்து வருகிறார்.

டெல்லி:

நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த கரப்பான்பூச்சி கட்சியை (சிஜேபி) சேர்ந்தவர்களும், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பெருமளவிலான இளைஞர்களும் நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம், பேரணி நடைபெற்றது.

ஜந்தர் மந்தரில் தொடங்கிய பேரணி, மத்திய டெல்லியின் முக்கியச் சாலைகளுக்கு பரவியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

தடியடி, கண்ணீர் புகை

டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடுப்புகளை மீறி முன்னேறும் அவர்களை தடுத்து நிறுத்த தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். மேலும் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுத் தள்ள மத்திய படையினர் துப்பாக்கியை தூக்கி குறிபார்த்தாவாறு நின்றிருந்தனர்.

தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சுக்கு மத்தியில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

காயம் - கைது

நாள் முடிவில் கிடைத்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 118 காவல் துறையினரும், போலீசாரின் தடியடியில் 60 போராட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக 70 பேரை காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர்.

பொதுச்சொத்துக்களுக்குசேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களைத் தாக்குதல் மற்றும் கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நட்டாவுடன் பேச்சுவார்த்தை

போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர், ஜந்தர் மந்தருக்குத் திரும்புமாறு போராட்டக்காரர்களுக்கு சிஜேபி தலைமை அறிவுறுத்தியது. அதற்குள் ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட மேடைகள் அகற்றப்பட்டிருந்தன. இருப்பினும் சிஜேபியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்ட பிரபலன்களும் சமூக செயல்பாட்டாளர்களும் இளைஞர்களுக்கு பக்க பலமாக பங்கேற்றுள்ளனர்.

இவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவர்கள் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவமனையில் இருந்தபடி கல்வியாளர் சோனம் வாங்சுக் தன் உண்ணாவிரதத்தை 23வது நாளாக தொடர்ந்து வருகிறார்.