

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது CJP அமைப்பினர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை நாட்டின் வரலாற்றிலேயே "இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான" பிரதமர் என்று சாடினார்.
மாணவர்கள் காயம்:
நாடாளுமன்றத்தை அடைவதை தடுப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை அதிகப்படியான பலப்பிரயோகம் செய்ததாக 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) குற்றம் சாட்டியது. இதில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தள்ளப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இருப்பினும், ஆங்மோ தாக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி காவல்துறை மறுத்தது. அத்தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறானவை. எந்தவொரு தனிநபரும் குறிவைத்து தாக்கப்படவில்லை" என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி விவாதத்திற்கு வலியுறுத்தியதால், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவை நடவடிக்கைகள் முடங்கின.
எக்ஸ் தள பதிவு:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 'எக்ஸ்' தள பிதிவில், "பிரதமர் மோடி இந்திய வரலாற்றிலேயே 'இளைஞர்களுக்கு எதிரான மிக மோசமான' பிரதமர் ஆவார். அவர் எந்தளவுக்கு இளைஞர்களுக்கு எதிரானவர் என்றால், தோல்வியடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை கூட அவரால் பெற முடியவில்லை.
152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளி என ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குத்தான்," என குறிப்பிட்டு இருந்தார்.
தனது பதிவில் ஒரு காணொளி செய்தியையும் அவர் இணைத்திருந்தார். அதில் அரசாங்கத்தையும் காவல்துறையையும் விமர்சித்த ராகுல் காந்தி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் "நியாயமானவை" என்று குறிப்பிட்டார். அமைதியான முறையில் போராடுவது ஒரு "மீற முடியாத அடிப்படை உரிமை" என்று காந்தி கூறினார். போராட்டக்காரர்களான மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தன.
காவல்துறை வட்டாரங்களின்படி, CJP போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 50-க்கும் மேற்பட்ட காவலர்களும், அதே எண்ணிக்கையிலான போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இதை தொடர்ந்து காவல்துறை தடியடி நடத்தியது.
100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டு, டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, டி.எம்.சி. தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரும் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தனர்.
கல்வி தொடர்பான நியாயமான கேள்விகளை மாணவர்கள் எழுப்பும்போது, அவர்களுக்கு பதிலாக தடியடியும் சிறைபிடிப்பும் மட்டுமே கிடைப்பதாக காந்தி கூறினார்.
"தேர்வு வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் நியாயமான பிரச்சினைகளை எழுப்பும் மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இந்த அரசு இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாய்ந்து தாக்குதலையும் நடத்துகிறது," என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
மாணவர்களுக்கு ஆதரவு:
ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒடுக்குவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டின. அத்துடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தின.
தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ. (எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்களான விஜூ கிருஷ்ணன், அருண் குமார், மரியம் தவலே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.